×

வெற்றித் தெய்வம் வாராஹி

வாராஹி நவராத்திரி: 10-7-2021 முதல் 18-7-2021 வரை

லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள். ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும் படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்தமாதர்ளில் தலையானவள். மகாகாளி தாருகாசுரனோடு போர் புரியும்போது அவளுக்குத் துணை நின்றவள் இவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி இவள். சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு,சக்கரம், கதை போன்றவற்றை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தி அவரின் அம்சமான வாராஹியும்பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள்.

மந்த்ர சாஸ்திரம் அறிந்தவர்கள் பல்வேறு ரூப பேதங்களில் இவளை வழிபடுகின்றனர். இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது தன்பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற மனைவியாய் இருப்பதுபோல் உள்ளது. அனந்த கல்யாண குணங்களை உடையவள்.

வலக்கரம் அபய முத்திரையுடன் இருப்பது அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குவதாகவும் உள்ளது. இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாககடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படிச் செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு வயிற்றில் கடினமாகச் செரியாமல் இருந்தாலும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் கெட்டியானமனதையும், தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும், தெளிவடையும் புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது. மேலும், பல பிறவிகளின் கர்மவினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை, பூமியில் புதைந்துள்ள கிழங்கை கலப்பையால் ஆழத்தோண்டி மேலே கொண்டு வருவதைப் போல், ஞானக் கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கின்றது.

இத்தேவி வராக முகம் கொண்டதேன்?
‘‘மானமில்லாப் பன்றிபோல் உபமான

முமில்லை என்பது ஆன்றோர் வாக்கு” தேவர் களுக்கு அதிபதியான அதிரூப சௌந்தர்யம் கொண்ட திருமால் கடலில் புதைந்த  உலகை மேலே கொண்டு வர மானமில்லாப் பன்றி வடிவெடுத்ததில் அவனுக்கு நிகருண்டோ? என வியக்கின்றனர் சான்றோர்.பன்றி மானமில்லாததாகக் கருதப்படுவதாயினும் அதனிடம் இருந்து உயர்ந்த ஆன்ம குணம் நமக்குப் பாடமாக வெளிப்படுகிறது இல்லையெனில், அவமானமும் இல்லையன்றோ? மான அவமானம் எனும் இரண்டிலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஞானசாதனை. சுகத்தையே வேண்டாம் என்பவருக்குத் துக்கம் ஒன்றுமே செய்யாதல்லவா? தன்மானம், தன்மதிப்பு, தற்பெருமை எனத் தன்னையே பாராட்டிக் கொண்டிருப்பவர்கள்தான் தனக்குச் சிறு அவமதிப்பு நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளாமல் துவண்டு போவார்கள். புகழ்ச்சிக்கு மகிழ்ந்தும், இகழ்ச்சிக்கு அஞ்சியும் வாழ்வது ஞானத்திற்குப் புறம்பானது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பன்றியின் முகத்தைக் கொண்டுள்ளாள் போலும்.

“நீ ஞானத்தில் உயரவேண்டுமெனில் துடைப்பம் போலிரு’’ என்பர் பெரியோர். நாம் வேண்டாதவர்களை கடினமாகப் பேசும்போது ‘துடைப்பக்கட்டை’ எனும் வார்த்தையை உபயோகித்து இருப்போம். கீழ்த்தரமானவன் என நாம் நினைத்து அந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்போம். ஆனால், துடைப்பம் தூசிகளைச் சேர்த்து ஒருபுறமாக ஒதுக்கிவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்கிறது. அது ஒருநாள் தன் பணியைச் செய்யாவிடில் வீடே குப்பைக்கூளமாய் மாறி நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உருவாகிறது. அதுபோல் நீயும் கர்வம் கொள்ளாமல் உன் கடமையைச் செவ்வனே செய். உன்னை நினைத்து பெருமைப்படாதே! புகழுக்கு ஆசைப்படாதே. உன் பணி முடிந்ததும் ஒதுங்கிக்கொள். எல்லோரும் நலமுடன் வாழ துடைப்பம்போல் பாடுபடு என்பார் ஆன்றோர்.

அதுபோல் வாராஹியும் தன் அடி யார்களின்பாபபீடைகளை எல்லாம், மாயாமல மாசுக்களை எல்லாம் களைந்து அவர்களைத் தூய்மைப்படுத்துகிறாள்.தான் ஈன்ற கன்றினை தன் நாக்கால் நக்கி பசு தூய்மைப்படுத்துவதுபோல தன் தாயன்பால், உயர்குணத்தால் தன்னை அண்டுவோரின் தோஷங்களை எல்லாம் போக்கிப் புனிதமாக்கி, பயம், பந்தம், துன்பங்களிலிருந்து மீட்டு முக்திக்கு அருள் செய்கிறாள்.

பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படை களுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்கன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானம் பரக்கப் பேசுகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் விஷூக்ரப் ப்ரான  ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன.

இவள் ஆரோகணித்து வரும் ரதம் ‘கிரி சக்ரரதம் என்றும், இவளின் யந்திரம் ‘கிரியந்த்ரம்’ என்றும் போற்றப்படுகிறது. (கிரி- பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது. பராபட்டாரிகையான லலிதையின் மனக்குறிப்பறிந்து கீதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள்போற்றப்படுகிறாள்.

மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும், மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய பயங்களையும், இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம்.உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரீணி, கிரிபதா போன்றோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாவர்.

இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் முக்கியமாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.காசியில் வாராஹி, காஞ்சி காமாட்சிஅம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சைப் பெரிய கோயில் வாராஹி என விசேஷமான வாராஹிசந்நதிகள் பக்தர்களுக்கு அருள்மணம் பரப்பி வருகின்றன.

‘கோலம்மா’ என்றும் வாராஹி தேவியை அழைத்து வழிபடுவோர் உண்டு. பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார்.அறுபது கோடி வாராஹி கன்னிகைகள் இவள் பரிவார தேவதைகளாக ஏவல்புரிவதை  ‘தேவி’ சஷ்டி கோடி பிர்வ்ருதா’ எனும் திருநாமம் உணர்த்துகிறது. மிக்க வீர்யம் கொண்டவள் என்பதை ‘வீர்யவதி’ என்ற நாமம் குறிக்கிறது.

வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை.  வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் கட்டாயம் தேவை. எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும், பித்தமும் ஏற்படும். மயில்தோகை விசிறியால் விசிறி, ப்ரார்த்தனை செய்து முறுக்கும், வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, நெய்
விளக்கேற்ற, கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம்.

ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும் வாராஹியை பஞ்சமி, தண்ட நாதா, ஸங்கேதா, சமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி, வழிபட நம் துயர்கள் தூசுபோல் பறக்கும்.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே இவளைத்துதிக்க வாராஹிமாலை, நிக்ரகாஷ்டகம், அனுக்கொஷ்டகம், அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறுதுதிகள் உள்ளன. ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி நம் பாத கமலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்.

வாராஹி காயத்ரி:
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

ஜெயலட்சுமி

Tags : Varahi ,
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்